Sunday, October 6, 2013

என் மகளுக்கு..#1

இன்று என் மகளுக்கு மழையை அறிமுகம் செய்தேன்
எனக்கு தெரிந்த மொழிகளில்..
அவள் மழை ரசிப்பதென்பது என்னவென்று எனக்கு
அழகாய்ச் சொன்னாள் தன் விழிகளால்..

என் மகளுக்கு..#3

நீ நடைபழகத் தொடங்கிய நாள்தொட்டு
இந்த நிலத்திடம் புது நாணம் காண்கிறேன்..
உன் பனிப்பூ பாதம் கொண்டு
அடிக்கொருமுறை நீ பதிக்கும்
முத்தங்களால் தானோ?

என் மகளுக்கு..#2

புவிஈர்ப்பு விசையை வசைபாடியபடியே
பூமி தொடுகின்றன..
உன் பிஞ்சுக்கைகளில் தேங்கிட வழியின்றி
நழுவி வழியும் நீர் துளிகள்!!

வீடு..

நாம பிறந்து நினைவு அறியாமல் சில காலம் வாழ்ந்த வீடு என்று ஒன்று இருக்கும்.. சிலருக்கு அதே வீட்டில் எப்பொழுதும் இருக்கும் வாய்ப்பு அமையலாம்.. ஆனா பொழப்பு தேடி பல ஊரு போற நம்மள மாதிரி பல பேருக்கு.. school  முடிக்குர வரை வாழற வீடுதான் பல நினைவுகள சுமந்து நிக்குற ஒரு இடமா இருக்கும்.. engineering  college  seat  கிடைச்சு  பெரிய cityக்கு போரம்டானு கெளம்புறப்போ கொஞ்சம் கூட நாம உணர்வதில்ல..அது வீட்டை விட்டு திரும்பி வராம நாம போகப்போற பல மைல் தூரத்துக்கான முதல் அடின்னு ... சொந்த வீடோ வாடகை வீடோ.. அது ஒரு உயிரற்ற விஷயமா மட்டுமே தெரியுறதில்ல.. நம்ம சிரிப்பையும் அழுகையையும் பார்த்திருக்கும்.. நம்ம கோபத்துக்காக அந்த கதவுகள் பல முறை அடி வாங்கியிருக்கும்.. என் திருநெல்வேலி வீட்டோட ஞாயிறுகளின் மதிய நேர அமைதி எனக்கு வேற எங்கயுமே கிடைச்சதில்ல.. கவலைப்பட ஏதுமில்லாம சும்மா மரம் செடியோட செலவிட கிடைச்ச அந்த பொழுதுகள் எனக்கு நிச்சயம் ஏதோ கற்றுகொடுத்திருக்கும்.. பால்கனில உக்கார்ந்து பின் இரவு நேரத்துல பயமுறுத்துற இருட்டையும் மயான அமைதியையும்  தரிசிச்சுகிட்டே நானும் என் அண்ணனும் book  ல ஒரே பக்கத்தை 1hr க்கு மேல தாண்டாம இருந்தது நினைவுக்கு வருது.. அந்த வாசல்ல உக்கார்ந்து தல மேல விழுந்து நம்ம ஆயிச குறைசுடுமொனு பயந்துகிட்டே எருமை sizeல இருந்த பல்லியொட  யோகா session  பார்த்தது நினைச்சு இப்போ சிரிக்குரேன் .. கொசுக்கடிய கண்டுக்காம கால் கடுக்க வாசல் ல நின்னு வீட்டுக்கு வர்ற friends கிட்ட எவ்ளோ கதை பேசிருப்பேன்!!..
இப்போ 2 bed  2 bath apartmentனு  US ல வந்து settle ஆனா பல பேருக்கு எப்போடா  போய்  நம்ம வீட்டு  hallல sofa ல கால் மேல கால் போட்டு உக்கார்ந்து TV பார்ப்போம்னு ஏங்குற ஒரு சொந்த வீடும்  வீட்டோட நினைவும் இருந்திட்டுதான் இருக்கும்ல..:)

பின் குறிப்பு:  மொபைல்ல இருந்த எங்க வீட்டோட இந்த போட்டோ கிளறிய  நினைவுகள் இவை.. 

Friday, November 2, 2012

பேனா..

Englishல ஓரளவுக்கு புரியற மாதிரி எழுத தெரிஞ்ச எனக்கு, தமிழ் எழுத்துக்கள் மொட்டை மாடியில அம்மா காயவைக்கிற வடாம்/வத்தல் மாதிரி வந்து விழுறது ரொம்ப வருத்தமா இருக்கு. பேனா பிடிச்சு எழுதி எவ்ளோ வருஷம் ஆச்சு!! அது ஒரு சுபானுபவம்னு எழுதும் போதுதான் தெரியுது. ஒரு சராசரி Software Engineerஆ நான் அதிகபட்சமா கடைசியா எழுதினது என் Home loan agreementல போட்ட 30 40 கையெழுத்துகள்தான்.அதுவும் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். பள்ளியில 4 ஆம் வகுப்பு வரைக்கும் 'Natraj' HB  பென்சில் பிடிச்சு எழுதிட்டு திரிஞ்ச நான், எப்போடா 5 ஆம் வகுப்பு போய் 'Hero' பேனா பிடிச்சு எழுதுவோம்னு ஏங்கி காத்திருந்தது நினைவுகளில் நிழலாடுகிறது. கையில, சட்டை பையில எல்லாம் 'Bril' ink  கரையோட வீடு திரும்பிய நாட்கள் நிச்சயம் திரும்பப் போறது இல்ல. பேனா பிடிச்சு எழுதும் போது நம்ம எண்ணங்கள் கையெழுத்து மூலமா பேப்பர்ல ஊடுருவி பிரதிபலிக்கிற ஒரு உணர்வு கிடைக்குது. இன்னைக்கு Ipad, Surface  விதம் விதமா 'Tablets' வந்து இறங்கினாலும் அவனுங்களும் கையில ஒரு பேனாவ குடுத்து LCD Screenல எழுத சொல்லி 'Technology has improved soo much you know'னு நம்மகிட்டையே அலப்பறை பண்றானுங்க.எழுதுறது குறித்து எழுதும் போது 'கடிதம்/மடல்/லெட்டர் னு வேசுக்குவோமே'..அதை குறிப்பிடாம இருக்க முடியல. நம்மளில் எத்தனை பேரு வாழ்கையில ஒரு முழுமையான கடிதம் எழுதிருப்போம் ? நண்பனுக்கு, உறவினருக்கு,  காதலிக்கு ,  இல்ல வாத்தியாருக்கு 'மொட்டை' கடுதாசி' ?? இல்லவே இல்லையா? அது ஒரு பேரிழப்பு என்று நான் சொல்லுவேன். ஒரு old email  archiveல இருந்து எடுத்து பார்கிறதை உங்களால ஒரு பழைய கடிதத்தை பார்க்கிற பரவசத்தோட ஒப்பிட முடியுமா?  வெளிநாட்டுல இருந்த என் தந்தைக்கு schooltime நான் கடிதம் எழுதினது எனக்கு ஞாபகத்துக்கு வருது. ஆனா அதன் பெரும்பகுதி englishல எழுதினதுக்கு இப்போ வருத்தப்பட மட்டும்தான் என்னால முடியுது! என் பள்ளி நண்பன் ஒருவனுக்கு classலயும் labலயும் திருட்டுத்தனமா எழுதி அனுப்பிய ஒரு கடிதமும் பசுமையான நினைவா இருக்கு. இவ்ளோ பேசிட்டு இதை google transliterateல type பண்ணிட்டு இருக்கிறது ஒரு நல்ல எண்ணத்துலதான். நான் பேப்பர்ல எழுதி scan பண்ணி post பண்ணிருந்தா அது என்ன மொழின்னு கண்டுபிடிக்க நீங்க கஷ்டப்பட கூடாதுனுதான்:-)

Saturday, June 16, 2012

flash back..:-)

ஊர் அடங்கிப்போன பின் இரவு நேரங்கள் எப்போதுமே மனசுக்கு மிக நெருக்கமா இருக்கு. 'ஒரு நாளை ஏன்டா அவ்ளோ சீக்கிரம் முடிச்சுக்கணும்?'னு தத்துவம் எல்லாம் சொல்லி ஒரு கூட்டமே ரூம் ரூமா கதை பேசி சுத்தக்கிட்டு திரிஞ்ச ஹாஸ்டல் நினைவுகள் பசுமையா இருக்கு. ஆனா அடுத்த நாளோட பாதி தூங்கியே கழியும்னு எங்களுக்கு தெரியாம ஒண்ணும் இல்ல:-) ராக்கிங்கு பயந்து ஹாஸ்டல் சேர்ந்த சில வாரங்களிலே நைட் ஷோ போற பழக்கம் வந்துடுச்சு. தாம்பரம் வித்யாவ விட மவுண்ட் ரோடு தேவிதான் எங்களுக்கு பிடிச்சுது. அட தியேட்டர் பேருங்க வேறொண்ணும் இல்ல. 'தேவி பாலா'ல ஈவீனிங் ஷோ பார்த்துட்டு டின்னெர் சாப்டர கேப் ல 'அயோயோ 'தேவிகலா' கோவப்பட போறான்னு' டக்குனு நைட் ஷோ போய் எவ்ளோ மொக்கை படமா இருந்தாலும் சினிமாவ வாழ வெச்சுட்டுதான் வருவோம். LIC ஸ்டாப்ல platformல உக்கார்ந்து ஒரு ரவுண்டு கதை பேசிட்டு load இல்லாத லாரி பார்த்து செலக்ட் பண்ணி தலைக்கு 7 ரூபா பேசி திமுதிமுன்னு பின்னால ஏறி ஊர்வலம் மாத்ரி போவோம். பல நூறு sodium vapour லாம்ப் வழி எல்லாம் கடந்து போகும். ஆனா ஒவ்வொரு ஏரியாவும் ஒரு தனி அடையாளத்தோட இருக்கும். பல்லாவரம் தாண்டிடிச்சுனு Ponds company வாசம் சொல்லும். தாம்பரம் தாண்டி இரும்புலியூர் bridge கடந்ததும் அப்டியே ஜிவ்வுன்னு cityஓட population,pollutionல எல்லாம் இருந்து தப்பிச்சு வந்த பின் இரவுப்பனி வந்து காது மடலெல்லாம் சிலிர்திட்டு போகும். வண்டலூர் வந்ததும் லாரில இருந்து குதிச்சுட்டு மாமூலுக்கு பயந்து பாதி பூட்டின கடையில அரைகுறையா எரியுற அடுப்புல ஒரு டீ போட சொல்லி குடிச்சுட்டு ரூம் வந்து அடையும் போது காக்கா குருவி எல்லாம் brush பண்ணி குளிச்சு dutyகு கிளம்பிட்டு இருக்கும்.... பின்நாளில் கார்ல போய் இறங்கி e-டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டு மவுண்ட் ரோடுல a/c கார் ல போகும்போது எவ்ளோ trafficலயும் LIC பஸ் ஸ்டாப் ஒரு தடவ பார்க்க தோணுது. ஊருக்கு பஸ்ல போற ஒவ்வொரு தடவையும் வண்டலூர் தாண்டி பஸ் போகும்போது பூட்டி இருக்குற காலேஜ் கேட்'குள்ள ஒழிஞ்சு கெடைக்குற இது போன்ற ஒரு கோடி ஞாபகங்கள் ஒரு நொடி flashbackல coil சுத்தாமலே வந்து போகுது...

Wednesday, June 6, 2012

அனுபவம் புதுமை

பள்ளி நாட்களில் படிப்பை விடவும் நாம நிறைய நல்ல அனுபவங்களை கடந்து சுமந்து வர்றோம். நான் திருவிழா எதுவும் பார்த்ததில்லை. ஆனா அதற்கு ஈடான ஒரு அனுபவத்தை கொடுத்தது Annual School Day functions. பெஞ்ச் எடுத்து போடறதும் stage decorate பண்றதும் மட்டுமே நம்ம பங்களிப்பா இருந்தாலும் அதுல ஒரு தனி ஆர்வம். நாம சுத்தி சுத்தி ஓடி விளையாண்டு தேஞ்சு போன stage புது பொண்ணு மாதிரி அலங்கரிச்சு நிக்குறதை பார்க்கவே அவ்ளோசூப்பரா இருக்கும். எல்லா வருஷமும் ஒரு 'peter' டிராமா, ஒரு தமிழ் சரித்திர டிராமா, குழந்தைங்க கும்மி அடிக்குற டான்ஸ் ஒண்ணு.. சில பல பாட்டு danceன்னு கலை(ளை) கட்டும். பசங்க குரூப்ல பெரிய அப்பாடக்கர் மாதிரி சீன் போட்டு சுத்தினாலும் stageல நின்னு பாடவோ நடிக்கவோ நம்மளால முடியாதுனு நெனைச்சு திறமைக்கு திரை போட்டு ஒதுங்கி நின்னு கலாய்க்குற ஒரு சாமான்ய studentதான் நானும்:-) இப்படி ஒரு கால கட்டத்துல நான் ரொம்ப மதிக்குற எங்க chemistry சார் ஒரு வருஷம் commercial டிராமா ஒண்ணு include பண்ணினாரு. இதுல நமக்கு ஒரு lengthஆன character வேற. Bank மேனேஜர் Role. அட அந்த get-up ல நான் போட்ட Tie length கூட இல்ல என் டயலாக். Stageல நின்னு அந்த டயலாக் சொல்லறதுக்குள்ள நான் பட்ட அவஸ்தை இருக்கே..அய்யோயோயோ.. ஆன stageல நம்மள focus ஆகி இருக்குற powerful lightsல கீழ இருக்குற கும்பல் கண்ணுக்கு தெரியாது. so பயமில்லாம ஏதோ சமாளிச்சேன்:-) வாழ்க்கைல சில அனுபவங்கள் trainல மீட் பண்ற ஒரு அழகான பொண்ணு மாதிரி. பிடிச்சா உடனே பேசிடணும். அப்புறம் இதை மாதிரி ஒரே trainல ஒரே coachல ஒண்ணா travel பண்ணற வாய்ப்பு கிடைக்காது :-) அபூர்வ அனுபவங்கள் தொடரும்... :-) 

Saturday, January 21, 2012

அலைகள் ஓய்வதில்லை





அலை துரத்த விலகி ஓடும் என் மனம் 
கடலை ஜெயித்தாய் கர்வம் கொள்கிறது!
பின்பு அடங்கி எழும் அடுத்த அலை தன் கால் 
நனைக்காதா என்று ஏங்கித் தவிக்கிறது!
உன் நினைவலைகள் போலவே நிஜ அலைகளிடமும்
தோற்கிறது என் மனம்!



Friday, January 20, 2012

பெண் என்னும் ஹைக்கூ

பெண்கள் ஒரு ஹைக்கூ போல..
புரிந்ததாய் நினைத்து முடிப்பதற்குள் 
வேறு ஒரு அர்த்தம் தந்து சிரிப்பர் :-p



மேக ஓவியம்


உருமாறும் மேக ஓவியங்கள் 
உன்னை வரைய நினைத்து ஒவ்வொரு முறையும் 
வானம் தோற்பதை காட்டுகிறதோ?
பின்பு தன் தோல்வி எண்ணி
வானம் வெம்பி கோபமழை கொட்டுகிறதோ?


Thursday, December 8, 2011

பிரிவு


பிரிவு என்பது ஒரு தற்காலிக மரணம்
மறு ஜென்மம் இருப்பதை நம்பி
சேர காத்திருக்கிறது மனம்!!!





ஒரு நாளின் பல கதைகளை 
ஒரே வரியில் எழுதிவிட்டு 
ஒற்றை புள்ளி வைத்துச் சாய்கிறது 
சாயங்கால சூரியன்!!



Thursday, April 21, 2011

ஏப்ரல் மே

இறுதித்தேர்வுகளின் பதட்டமும் இல்லாமல்
விடுமுறை நாட்களின் பரவசமும் இல்லாமல்
hike..Onsite என்று மற்றும் ஒரு மாதம் என கழிகின்றன ஏப்ரலும் மேயும்..!!!

Friday, February 11, 2011

உன்னுடன்



என் ஜன்னல் ஓர ரயில் பயணங்களில்
நீ எப்போதும் என்னுடன் வருகிறாய்.
கடந்து செல்லும் மின் கம்பம் ஒவ்வொன்றிலும் உன் பிம்பம்.. 
முன்பதிவு இல்லாமால் வந்து உன் பதிவை விட்டுச் செல்கிறாய் நீ!
 

Thursday, January 13, 2011

தேடல்!

கனவுகளை நாம் தேடியபடியே நகர்கிறது இரவு..
கனவுகள் நம்மை துரத்தியபடியே நீழ்கிறது பகல்..
இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஒழிந்திருக்கிறது வாழ்க்கை!!

Monday, July 19, 2010

Charlotteல் கடைசி நாள்...


எனக்காக இன்று மீண்டும் வந்த பனி மழையும்..
என்னை பிரிய மறுத்த என் மடி  அமர்த்தி நான் தொட்ட க(ண்)ணினியும்..
என் உள்ளங்கையை சில நொடிகள் உஷ்ணமாக்கிச் சென்ற ஸ்டார்‌பக்க்ஸ் கோப்பைகளும்..
பஸ் பயணங்களில் என்  தோழ் உரசிய முகம் அறியா தோழனும்..
எனக்காகவே தினம் எங்கோ இசைத்த ஆலய மணி ஓசையும்..
என்னையும் அறியாமல் என் விழி நனைத்து போகிறது!!!!

வானம் வரை..



 நான் காகிதம் தேடுவதற்குள் வானம் சென்று தொடுகிறது உன் நினைவுகள்.. கவிதையாய்!!


நினைவுச்சுவடுகள்

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நினைவை அணிந்து கொள்கிறது. பின்பு ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் வெவ்வேறு வண்ணமாய் அந்த நினைவுகள் வரைந்து மறைவது எழுதா கவிதை!

Friday, September 11, 2009

என் முதல் வலைப்பதிவு


முதல் காதலுக்கான பரவசத்தையும் மிஞ்சுகின்றது இந்த முதல் வலைப்பதிவு அனுபவம்.
எனது எழுத்தாற்றலை பலர் விமர்சிக்க வேண்டும் என்பதை விட.... பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் பரீட்சையோடு மூடி வைக்கப்பட்ட பேனாவின் மூடியை திறந்து... மீண்டும் அந்த காய்ந்த மை முனை சுமக்கும் தமிழ் வாசனை நுகர ஆசைப்பட்டதன் விளைவுதான் இந்த வலைப்பின்னல் முயற்சி.